http://cdn.wn.com/ph/img/65/19/a45c0bb346a3e9bf1def8e3801ad-grande.jpg

ஆயுட்காலம் மறதியாய்
குறிக்கப்பட்டு இறைவனால்
பூமியில் தூவபட்ட
விதை
நான்

இலைகள் துளிர்விட்டு
விருட்சமாய் வளர்வேநென
ஆசையை
சுமந்துதான்
வளர்ந்தேன் நான்

ஏழாவது அறிவை
எட்டிபார்க்கும்
மனிதன்
என் உடம்புக்குள்
கதிர்வீச்சை செலுத்துகிறான்

வண்ண
வண்ண
மிட்டாய்கள் சுவைக்கும்நாவு
சுவையாமலேயே மாத்திரைகளை
உடம்புக்குள்
தள்ளுகிறது

கொஞ்சி விளையாடிய
அம்மா எந்தன்
முகம்
பார்த்துவிட்டு
கடவுளின்முகம் பார்க்கிறாள்

நான் பிறந்தபொழுது
அவள்
கண்டகனவுகளை
அழிக்க.. கண்ணீரும்
வற்றிவிட்டது அவளுக்கு

வலியெல்லாம்
உடம்பில்
நம்பிக்கையென்பது மனதில்
எமனுடன் போராடி
இவ்வுலகில்
வாழமுடியுமா?


வலிகள் வருகிறது..
வெள்ளை தேவதைகள்
நிரம்பிய ஆஸ்பத்திரியில்
மரத்து போகிறது

தெருவோரத்தில் ஐஸ்காரனை
பார்த்தும் பார்க்காதுபோல்
செல்ல பழகிவிட்டது
ஆசைகொண்ட மனம்



அன்றுகூட தும்மலின்பொழுது
பாட்டி தலையில்தட்டி
நூறு வயது
எனக்கு
என்கிறாள்


நல்ல தூக்கம்
நேற்று அதிசயமாய்
கனவிலும்கூட
ஆஸ்பத்திரி
வாடை துரத்துகிறது

தலையில் முடியும்
இல்லாமல்
பள்ளியில்
நண்பனின் கிராப்முடிபார்த்து
ஆசை வருகிறது

அண்ணன்
நானே
விட்டுகொடுக்க வேண்டும்
அப்பா ........இப்பொழுது
தங்கையை
விட்டுகொடுக்கசொல்கிறார்

எப்பொழுதும் சண்டைபோடும்
தோழன்
இன்றும்
இருக்கையை விட்டுகொடுத்து
பரிவாய் பார்க்கிறான்

எனக்காய்
விட்டுகொடுக்க
இத்தனைபேர் இருபதால்தானோ
இறைவன் என்னிடம்
எனதாயுளை விட்டுகொடுக்க சொல்கிறார் ???