ஒரு பெண்ணின் கருப்பையில் கள்ளமில்லாமல் வளரும் மனிதக் குழந்தையின் பாலினம் பெண்ணென்றால் ,அதை அழிக்க துணிகின்றனர் பெற்றோர்.இந்த பாவத்தை செய்ய துணிவதில் ஆணென்ன?பெண்ணென்ன ? பெற்ற மனம் தான் என்ன ? .அனைத்தும் கள்ளமுள்ள சமுதாயத்திற்கு அஞ்சுகிறது. கோழைத்தனமும்,மூட நம்பிக்கைகளும் மாயையாய் இவர்களை ஆட்டிப் படைக்கிறது .இதே சமுதாயம் தான் பெண் கடவுளர்களை வணங்குகிறது , இதே சமுதாயம் தான் மொழி நாடு நீர் நிலையென அனைத்தையும் தாயென கூறி உயர்த்துகிறது .ஆனாலும் ஏனிந்த பாகுபாடு ?.அன்று தாய்மடி பாராப் பச்சிளம் குழந்தைக்கு சங்கில் கள்ளிப்பால் புகட்டியும் நெற்மணி ஊட்டியும் கொன்று வந்த மக்கள் ,இன்று விஞ்ஞான வளர்ச்சியில் கொலையை நேர்த்தியாய் செய்கின்றனர் தாய் கருப்பையிலேயே பாலினம் கண்டு உயிரைக் களைக்கின்றனர் .இது கிராமப்பகுதியில் மட்டுமல்ல நகரப்பகுதிகளிலும் இத்தகைய கொடுமைகள் நடந்துவருகின்றன இதற்குத் தீர்வுதான் என்ன ?எங்கே இந்த நஞ்சு விதிக்கப்பட்டதோ அதையறிந்து இந்த குற்றத்தை வேரோடு பிடுங்கி எறியவேண்டும்.

பெண் சிசுக்கொலைக்காக கூறப்படும் காரணங்கள்

"என்ன பெண் குழந்தையா?எப்படி கட்டிக்கொடுக்க போகுற ? "போன்ற சமுதயாத்தின் வார்த்தைகளுக்கு அஞ்சியே பல பெற்றோர்கள் இந்த பாவச்செயலுக்கு துணிகின்றன .மேலும் நமது சமுதாய நம்பிக்கையின் படி ஆணை மட்டுமே குடும்ப வாரிசாகவும் அவனுக்கே மட்டுமே பெற்றோர் இறந்தால் கொள்ளிவைக்கும் நிலைமையும் இருக்கின்றது . வரதட்சணைப் பழக்கத்தால் மகளென்றால் செலவு என்றும்,மகனென்றால் வரவு என்றும் நினைக்கின்றனர்.இது போன்று ஒவ்வொரு சமுதாயத்திற்கும் ஒவ்வொரு விதமான மூடநம்பிக்கைகள் இருக்கத்தான் செய்கின்றன .

பெண் சிசுக்கொலையால் ஏற்படும் தீமைகள்

கிழக்காசிய நாடுகளான இந்தியா ,சீனா,திபெத்து ஆகியவையில் தான் இந்த கொடுமை பரவலாக நடக்கிறது.ஒரு நாட்டில் ஆண்களின் எண்ணிக்கையும் பெண்களின் எண்ணிக்கையும் சமன்பட்டு இருக்க வேண்டும்.அதுதான் இந்த சமுதாயத்துக்கும் நல்லது ,நாட்டின் வளர்ச்சிக்கும் நல்லது.ஆனால் இந்தியாவில் நூறுஆண்களுக்கு தொன்னூற்றி மூன்று என்ற எண்ணிக்கையில் தான் பெண்கள் உள்ளன .மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் என்னவெனில் ஒரு கணக்கெடுப்பின் படி 2020- இல் இந்தியாவில் இருபத்தைந்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்களும் சைனாவில் முப்பத்தி ஐந்து மில்லியனுக்கும் மேற்பட்ட ஆண்களும் அளவுக்குஅதிகமாகவே இருப்பார்.நினைத்துப்பாருங்கள் தற்பொழுதே ஆண்களுக்கு பெண் கிடைக்காத நிலைமை ஏற்பட்டுவிட்டது .இதனால் பாலியல் முறைகேடுகள் அதிகமாய் பெருகிவிட்டன.மேலும் பல சமுதாய சீர்கேடுகள் பெருக வாய்ப்புள்ளது.கருக்கலைப்பு செய்யும் பொழுதும் ,பிறந்த பிறகு குழந்தையை கொல்லும் பொழுதும் தாய் மனதளவிலும்.உடலளவிலும் பெரிதாய் பாதிக்கப்படுகிறாள்.

பெண் சிசுக்கொலைக்கு எதிரான நடவடிக்கைகள் - ஒரு ஆய்வு

பெண் சிசுகொலையின் தீவிரத்தை உணர்ந்த அரசு விழித்துக்கொண்டது . வரதட்சணைக்கு எதிரான சட்டம் / வரதட்சணை ஒழிப்புச் சட்டம்- 1961 அமலில் உள்ளது . இருப்பினும் அனைத்து ஆண்களும் தாங்கள் "வரதட்சணை வாங்காமல் திருமணம் செய்வோம்" என்று உறுதி மொழி எடுக்கவேண்டும் .

அடுத்து கருவிலேயே பாலினம் அறியும் செயலுக்கு எதிரானச் சட்டம் - PCPNDT act -1994 .மெத்தப்படித்த மகப்பேறு மருத்துவர்கள் தொழில் போட்டிக் காரணாமாகவும் பண ஆசையினாலும் கருவை அழிக்க துணிகின்றன.இதில் பெண் மருத்துவர்களும் அடங்குவர் என்பது மிகவும் வெட்கப்படவேண்டிய செய்தி

மேலும் பெண் சிசுக்கொலை கண்டறியப்பட்டால் குறைந்தபட்ச தண்டனைப் பதினான்கு ஆண்டுகள் தண்டனையும் அதிகபட்சம் ஆயுள் தண்டனையும் கிடைக்கும் .உடந்தையாய் இருந்தவர்களுக்கும் கொலைக்கு தூண்டியவர்கள் என்று கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் ஆய்வுக்கூடங்களுக்கும் மருத்துவமனைகளுக்கும் அங்கீகாரம் ரத்துசெய்யப்படுவதுடன் அபராதத் தொகையுடன் கூடிய தண்டனைகளும் தரப்படுகின்றன .ஆனாலும் பல உண்மைகள் மருத்துவமனைகளிலும் ,ஆய்வுக்கூடங்களிலும் மூடிமறைக்கப்படுகின்றன.நமது அரசு இந்த விசயத்தில் பாரா முகமாகவே இருக்கிறது என்பது அப்பட்டமான உண்மை.

'தொட்டில் குழந்தைத் திட்டம்' மூலம் சிசுக்களுக்கு ஆதரவு அளிக்கிறது தமிழக அரசு .இதைப் பின்பற்றி கேரளாவும் 'அம்மா தொட்டில்' என்ற திட்டத்தைக் கொண்டுவந்திருக்கிறது .இதனால் சிசுக்கள் கொல்லப்படுவதும் குப்பைத்தொட்டியில் தெருநாய்களுக்கு இரையாவதும் பெருமளவில் தடுக்கப்பட்டுள்ளது .இருப்பினும் பல தாய்மார்கள் குழந்தையை கொன்றாலும் பரவாயில்லை.தத்துகொடுக்கமாட்டேன் என்று அறியாமை இருளிலிருந்து வெளிவர மறுக்கின்றனர்.

பெண் கல்விக்கும் உரிமைக்கும் ஆதரவான சட்டங்கள் பல இயற்றப்பட்டுள்ளன .இது சரியாக மக்களைப் போய்ச்சேர அரசு ஆவணம் செய்யவேண்டும்.கிராமத்து பெண்களுக்குத் தங்களுக்குத் தரப்படும் சலுகைகள் பற்றி விழிப்புணர்வு பெறவேண்டும்.குழந்தை இல்லாத தம்பதியினர் 'பெண் குழந்தைகளைத்' தத்தெடுக்க முன்வரவேண்டும்.

சாதிச் சங்கங்களினால் இந்த புரட்சியை செய்ய முடியும்.தத்தமது சாதிகளில் பெண் வீட்டார் அளவுக்கு அதிகமாக அதிக நகைகள் மற்றும் பொருட்கள் தந்து திருமணம் புரிவதைக் கண்டிக்கவேண்டும் .

பெண்கள் சுய உதவிக்குழுக்களினால் கிடைக்கும் மனவலிமையையும் பொருளாதார மேன்மையையும் ஊடகங்கள் மூலமாக அறியச்செய்யவேண்டும். கைம்பெண்,கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு இது ஒரு ஊன்றுகோலாய் அமையும். இதனால் கிடைக்கபோகும் பயன் அந்த பெண்ணுக்கு மட்டுமல்ல.இந்த சமுதாயமே உயர்வை நோக்கி செல்ல உதவும் .அரசு வேலைகளிலும் ,தேர்வுகளிலும் முக்கியமாக குடிமைப்பணிகளுக்கு பெண்ணுக்கு வழங்கப்படும் சலுகைகளும் அறியச்செய்ய வேண்டும் .சில தனியார் நிறுவனங்களும் பெருஞ்சேவை நோக்கத்துடன் பெண்களுக்கு வேலை வாய்ப்புகளும் , திறமையுணர்ந்து பதவி உயர்வுகள் கொடுக்கின்றனர்.

கொலைபுறிவோம் அவலத்தை

மேற்கூறியவற்றை பயன்படுத்திக்கொண்டாலே போதும்.இனி மண்ணில் உதிக்கும் பெண்மணிகளைப்பார்த்து இந்த பாரே பாடும் " மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல மாதவம் செய்திட வேண்டுமம்மா".

இனி கொள்ளிவைக்க ஒரு மகன் இல்லையே என்று புலம்புவது அர்த்தமற்றது .பெண்களும் பெற்றோரின் சிதைக்குக் கொள்ளி வைக்கும் நடைமுறை என்றோ வந்துவிட்டது . தன்னை வாழவைக்க பெண் பிள்ளை இல்லையே! என்று வருத்தப்படும் காலம் வந்துவிட்டது .

சட்டங்கள் மட்டும் வந்தால் போதுமா ?

ஆண்களே !உங்கள் வீட்டுப் பெண்களை மதிக்கப் பழகுங்கள் ,சகப்பணியாளரிடம் கண்ணியமாக நடந்துகொள்ளுங்கள், போகப்பொருளாய் பெண்டியரைப் பார்ப்பதை மறவுங்கள் ,உயர்ந்து வரும் பெண்மணிகளை எள்ளி நகையாடுவதை நிறுத்துங்கள் .கைகொடுத்து மகிழ்ச்சிக்கொள்ளுங்கள்.

பெண்மணிகளே! பெண்ணுக்கு பெண்ணே எதிரியாகலாமா ? கயமை குணத்தை விட்டொழியுங்கள்.உங்கள் இறப்பிற்குப்பிறக்கும் உங்கள் தாய்மை குணம் போற்றப்படும் .பெண்ணின் மகத்தான சக்தியை உணருங்கள்.தவறாக பயன் படுத்தாதீர்கள். கல்வியால் கண்களைத் துடைத்துக் கொள்ளுங்கள் அது உங்களை மட்டுமல்ல உங்கள் சந்ததியினரையே வழிநடத்தி செல்லும்.பெண் சிசுக்கொலை என்ற வார்த்தை அகராதியிலிருந்து அழிக்கப்படும் நாள் வெகுதூரமில்லை .